- This event has passed.
முத்தமிழ் விழா- 10.02.2026
February 10 @ 10:00 am - 12:00 pm

தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் தன்னிகரற்ற துறைகளுள் ஒன்றாக இயங்குவது தமிழ்த்துறை. தமிழ்த்துறையின் சார்பில் ஆண்டுதோறும் இயல்,இசை, நாடகத் தமிழைச் சிறப்பிக்கும் வகையில் முத்தமிழ் விழாக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், தமிழ்த்துறையால் 10.02.2026 இன்று முத்தமிழ் விழாக் கொண்டாடப்பட்டது. விழாவின் தொடக்கமாக இறை வாழ்த்தும்,தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டன. தமிழ்த்துறைத்தலைவர்,முனைவர்.மல்லிகா வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர்.மோனிகா ராம்ராஜ் வாழ்த்துரை நல்கினார்.
முத்தமிழ் விழாவின் முத்தாய்ப்பாக, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்கள் முனைவர்.விஜயலட்சுமி “நீரைத் தேடிய வேர்கள்” என்ற தலைப்பிலும், முனைவர்.த.புவனேஸ்வரி “குறுந்தொகையில் தொகைமொழிகள்” என்ற தலைப்பிலும், முனைவர்.விஜயலட்சுமி,முனைவர்.புஷ்பகவல்லி, முனைவர்.வாசுகி, முனைவர்.சம்சு ஷகிதா ஆகியோர் இணைந்து “இலக்கிய நாடகங்கள்” என்னும் தலைப்பிலும் எழுதிய நூல்கள் வெளியிடப்பட்டன. தொடர்ந்து, கல்லூரியின் மேனாள் மாணவியும், 2025 ஆம் ஆண்டிற்காண கலைமாமணி விருது பெற்றவரும், நாட்டுப்புறப்பாடல்களின் நாயகியும்,எழுத்தாளரும்,தூத்துக்குடி வானொலியின் மேனாள் தமிழ் ஒலிப்பரப்பாளருமான.
முனைவர்.சந்திரபுஷ்பம் “மனித வாழ்வை மேம்படுத்துவது கலை” என்னும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.தனது உரையில், தான் கல்லூரியில் பெற்ற அனுபவங்களையும். தனக்குக் கல்விக்கற்பித்த பேராசிரியர்களையும் நினைவுக்கூர்ந்தார். மாணவிகள் கல்வியோடு ஏதேனும் ஒரு கலையினைக் கற்றுக் கொள்ள வேண்டும்.கலைஞர்கள் தங்கள் மறைவிற்குப் பின்னும் வாழ்பவர்கள். மாணவிகள் கல்வியோடு கலைத்திறனை வளர்க்க வேண்டும்,என்றும்,தனது உரையில் இடையிடையே பாடல்கள் இசைத்தும் மாணவிகளை உற்சாகப்படுத்தினார். கலைமாமணி விருது பெற்றது தாம் பெற்ற பேரு என்றும்,திறனுக்கு கிடைத்த பரிசு என்றும் எடுத்துரைத்தார். கலைதிறனில் வெற்றிப் பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, 1.30 மணியளவில், இரண்டாம்அமர்வு தொடங்கப்பட்டது.
இசைத்தமிழைச் சிறப்பிக்கும் வகையில், மாணவியர் பாடலிசைத்தும், கோலாட்டம் ஆடியும் மகிழ்வித்தனர். நாடகத்தமிழைச் சிறப்பிக்கும் வகையில், குறிஞ்சிப்பாட்டு இலக்கியம், நாடகமாக மாணவியரால் அரங்கேற்றப்பட்டன. முத்தமிழ்விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டியின் தலைப்பு “இக்கால இலக்கியங்களில் மனித மாண்புகள்” இதில் எட்டு கல்லூரிகளிலிருந்து 50 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் பங்குப் பெற்றனர். பேச்சுப்போட்டியின் தலைப்பு, “இன்றைய இளைஞர்களிடம் – தமிழ் வாழ்கிறதா, வீழ்கிறதா?” என்பது, இதில் ஐந்து கல்லூரிகளில் இருந்து, பன்னிரெண்டு மாணவ,மாணவியர் பங்கு பெற்றனர்.

பேச்சுப் போட்டிக்காக வழங்கப்படும் சுழல்கோப்பை விருதினை தூத்துக்குடி, ஹோலிகிராஸ் ஹோம்சயின்ஸ் கல்லூரித் தட்டிச் சென்றது.
பேராசிரியர்.விஜயகலைவாணி நன்றி நவில. தேசியகீதத்தோடு விழா நிறைவுப்பெற்றது.
தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் இவ்விழாவினை நடத்தினர்.
